மீளக் கிடைக்காத அன்பின் மீதம்.
- RithuPedia
- Apr 26, 2025
- 1 min read

தொலைதூர பஸ் பயணத்தில் இறங்குமிடம் வரும்போதுதான் உட்காரக் கிடைக்கிறது ஒரு ஆசனம்
நமக்குப்பிடித்த பாடலொன்று ஒலித்து ஓயும் நொடியில்தான் தொலைக்காட்சியை முடுக்கிவிடுகிறான் மகன்
அழகிய கனவொன்று ஆரம்பிக்கும் நேரம் பார்த்து அடித்து எழுப்புகிறது அலாரம்
பரீட்சை முடிய வினாடிகள் இருக்கையில் மளமளவென நினைவில் விரிகின்றன மறந்து போன விடைகள்
நீண்ட நேரம் பொறுத்திருந்து வரிசை மாறி நிற்கையில் வேகமாய் நகரத் தொடங்கும் நாம் முன்பு நின்ற வரிசை
நிறமும் பிடித்துப் போகும் வடிவமும் பிடித்துப் போகும் நமக்கான அளவு மட்டும் கடையில் இல்லை என்பான் துணிக்கடைக்காரன்
அன்பை நம் மீது வாரியிறைக்கத் தேடிய போதெல்லாம்
நேரமில்லை என்று தட்டிக்கழித்த நமக்கு பின்வரும் நாட்களில் எங்கு தேடியும் கிடைப்பதாயில்லை தாயும்,
அவள் சேமித்து வைத்திருந்த அன்பின் மீதமும்.



Comments