மூத்தம்மாவின் புடவை-நிலாத்தோழி -பரீனா பின்த் இஸ்ஹாக்
- RithuPedia
- Apr 12
- 1 min read

அடுப்புப் புகைக்குள்ள நிண்டுட்டு சோறோ, கறியோ ஆக்குற நேரத்துல, சுடுகிற சட்டி பானையத் தூக்குறத்துக்கு நாலஞ்சி புடவைத்துண்டு கிடந்தாலும் சொல்லாமக் கொள்ளாம அவசரமா கொதிக்கிற தேயிலைப்பானைய அடுப்புல இருந்து இறக்கி வைக்க அவசரத்துக்கு உதவும்.
பெரியப்பா கொண்டு வந்த கொள்ளியெல்லாம் கொத்திப் பிரிச்சி அடுக்கி வெய்க்கிற நேரத்துல, கழுத்துக்குள்ளால வழிஞ்சி ஓடுற வேர்வையத் துடச்சிப் போட்டுட்டு அடுத்த வேலைய உடனே பார்க்க உதவும்.
கிணத்தடிய போய் நிண்டு கை, கால், முகம் அவ கழுவினாலும் சரி. புள்ளைகள் கழுவினாலும் சரி. உடனே முகம் துடைக்க உதவும்.
வெயிலுக்க புள்ளையளத் தூக்கிட்டு போற நேரத்துல, புள்ளையள்ற தலைக்கு மேல வெயில் படாம குடையா விரிய உதவும்.
காலையில வீட்ட விட்டு போகக்குல குடை எடுத்துட்டு போகச் சொல்லியும் கேக்காம, மழையில நழைஞ்சி வார புள்ளையள்ட தலைய ஏசிக்கிட்டே துடைக்க உதவும்.
கால்லயோ கையிலயோ ரத்தக் காயத்தோட ஓடிவார புள்ளைக்கி கையாந்தகரை அரைச்சி வெச்சி மருந்து கட்ட உதவும்.
கண்ணைக் கசக்கிட்டு நிக்கிற அளவுக்கு ஏதெண்டாலும் ஒரு சம்பவம் நடந்தா,
மூக்குச் சீறிச்சீறி அழுது வடிக்க உதவும்.
கையில சொப்பின் பேக்குக் கொண்டுபோகாத நேரத்துல குறிஞ்சாவோ, வாதமடக்கியோ ஏதோ ஒண்ட பிச்சிப் போட்டு மடிக்குள்ள கட்டிட்டு வர உதவும்.
தட்டோ, சுளகோ, பீங்கானோ, கோப்பையோ ஈரமா இருந்தா துடைச்சிக் கிடைச்சி காயவைக்க உதவும்
தடுமல் வந்து மூக்கொழுகச் சுத்தி வார பேரப்புள்ளைட மூக்கைத் துடச்சி எறிஞ்சிட்டு அந்தப் புள்ளைய அள்ளிக் கொஞ்ச உதவும்.
புட்டுப் பானைக்கு ஓரம்கட்ட, வண்டப்பப் பானைக்கு வன்டுகட்ட, ஊற வெச்ச பச்சரிசியக் காய வைக்க, முந்தானைத் தொங்கல்ல காசி முடிஞ்சி வெய்க்க எண்டு இப்பிடியும் உதவும்.
எங்கயோ எதுலயோ விழுந்து நெத்தி புடைச்சிப் போன புள்ளைக்கி, முடிச்சிக்கட்டி வாயால ஊதி உடனடியா ஒத்தடம் குடுக்க உதவும்.
கடைசில, புதுசாப் பொறந்த புள்ளைக்கு பழைய புடவை ஒண்டு புதிய தொட்டிலா மாறி ஆராரோவோடு சேர்ந்து ஆலோபம் பாடவும் உதவும். நிலாத்தோழி (பரீனா பின்த் இஸ்ஹாக்)
Comments