நாளை நான் இறந்தால்!
- RithuPedia
- Jan 18
- 1 min read

என் தோட்டத்துப் பூக்களும் பூக்க தான்போகிறது என் இறுதி ஊர்வலத்திற்கு என்பதை அறியாமல்… தினமும் பலமுறை முகம் நோக்கும் என் கண்ணாடியும் என்னை தேடக் கூடும்… எந்நாளுமே கிடைத்துவிடாத மரியாதை….. பெரியவர்களும் என் கால் தொட்டு வணங்கக்கூடும்… புத்தாடை ஒப்பனைகளும் மஞ்சள் பூச்சுக்களும் மிகுதியாகவே இருக்கும்… இருப்பினும் அது என் திருமணம் அல்ல இறுதிப்பயணம்… என் நித்திலம் தரித்த ஆபரணமும் என் உடைமைகளும் எனதில்லை என்று ஆகிப்போகும்…. என் உறவுகளும் உயிருற்ற நட்புக்களும் என் காலடி பற்றி அழக்கூடும்…. இருப்பினும் அதைப்பார்க்க நான் ஏது?….. இறுதியாக என் முகம் பார்க்கும் நேரங்கள் கரைந்து கொண்டு போக … சொல்லாமல் மறந்த நன்றியும் மன்னிப்பும் பலரின் முகங்களில் வெளிப்படக்கூடும்…. நான் சென்ற தெருவில் என் உறவுகள் என்னை வழியனுப்பி வைக்க… தெருவோர மரங்களும் தெருமுனையின் பஸ் தரிப்பிடமும் ஏக்கத்துடன் கடந்து செல்லும்… ஆயினும் அதைப்பார்க்க நான் ஏது? எங்கோ பார்த்த முகம் என வழிப்போக்கரும் என் புகைப்படம் கண்டு கலங்க நேரிடலாம்… இறுதியில் அனைத்தும் அடங்கி ஆவியற்ற இந்த உடலுன் சேர்ந்து என் கல்வி அனுபவம் எல்லாம் எரிந்து சாம்பலாய் போகும்…. என் உறவுகளும் ஓரிரு தினங்கள் ஓலமிடலாம்… இருக்கும் வரை காண மறந்தோம் , அருமை உணர மறந்தோம் என யாரும் வருந்தலாம்… நாட்கள் மாதம் என மாதம் வருடம் என உருண்டோடிடும்… ஆண்டு ஒன்று பிதிர்கடன் விருந்துபசாரம் ஆண்டு சில இதே தொடரும்…. பின்னர் அதுவும் சுமையாகலாம்…. புகைப்படம் ஆண்டுக்கு ஒரு முறை தூசு இன்றி புனிதப்படுத்தப்படும்…. தலைமுறை மாறும்.. புகைப்படமும் இடம் நகரும்.. காலங்களால் மறைக்கப்பட்டவனாய் காணாமலே போய்விடுவேன் (( வாழ்க்கை என்பது ஒரு வரம் மீண்டும் ஒரு ஜென்மம் உண்டெனில் அதில் நாம் இதே மனிதராக இதே பெற்றோருக்கு பிள்ளையாகவும் வாழப்போவதில்லை. இயன்றவரை கிடைத்த வாழ்வை மகிழ்வாக வாழ்வோம்))
படித்ததில் பிடித்தது…
Comments