தாய்மாரிடம் கேட்டுப்பாருங்கள்..
- RithuPedia
- May 17, 2025
- 1 min read

சிறு பிள்ளைகள் உள்ள தாய்மாரிடம் கேட்டுப்பாருங்கள்..
அவர்கள் முழு இரவொன்று தூங்கி பல வருடங்களாகி இருக்கும்..!
பசித்தவுடன் சாப்பிடுவதென்பது கனவாகி இருக்கும்..!
களைத்துப் போயிருந்தாலும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்..!
தலைவலி என்றாலும்
உடல் வலி என்றாலும்
அமைதி என்பது மருந்துக்குக் கூட கிடைக்காது..!
மழலைகள் தரும் அந்த உற்சாகத்தால் தான் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கவும் முடிகிறது..!
அதனால் தான் ஓய்வுக்காக மூளை போடும் விண்ணப்பத்தைக் கூட உள்ளம் நிராகரித்து விடுகிறது..!
பிள்ளைகளின் பின்னால் சக்கரம் கட்டிக் கொண்டு ஓட வேண்டும்..!
வீட்டை அடுக்கி அடுக்கியே காலையும் மாலையும் கழியும்..!
ஒழுங்குபடுத்த தாமதித்த பொழுதொன்றிலே விருந்தினர் வருகையுமிருக்கும்..!
பிள்ளைகளின்
பஸ்ஸும் காரும் லொரியும் என வீட்டின் வரவேற்பறை ட்ரபிக் ஜாம் ஆகி இருக்கும்..!
கழுவிய ஆடைகள் காய்வதற்குள் அடுத்த கூடை நிறைந்திருக்கும்..!
வாசிப்பதற்காய் வைத்த புத்தகமெல்லாம் ஏளனமாய்ப் பார்த்துச் சிரிக்கும்..!
பாதியில் டைப் செய்த குறுஞ்செய்தி ஒன்று பரிதாபமாய்ப் பார்க்கும்..!
பிள்ளையின் பகல் நேரத் தூக்கத்தில் பக்கத்தில் படுத்தாலும்
பாதி செய்து மீதி இருக்கும் வேலையெல்லாம் நினைவுக்கு வரும்..
எதைச் செய்வது என தீர்மாணிப்பதற்குள் அவர்கள் தூக்கம் கலைந்து பாதிலே எழுந்துவிடக் கூடும்..!
ஆனாலும் எல்லா பிரச்சனைகளையும் மறந்து அவர்களோடு குழந்தைகளாகும் தருணங்கள் தான் இந்த வாழ்வின் அழகாக மாறுகிறது..!




Comments