ஒரு தாயின் புலம்பல்.
- RithuPedia
- Mar 1
- 1 min read

எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் – நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்… கொஞ்சம் பொறுமை கொள் ! அதிகம் புரிந்து கொள் !
என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே ! நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே….. திட்டி விடாதே….. உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர் !
ஆடை மாற்றுகையில் அவதிப் படுகிறேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே….. படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின் ஈர நினைவுகளை இதயம் கொள் !
ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே…. ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை எனை படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள் !
நான் குளிக்க மறுக்கிறேன்? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே…. உன்னை குளிக்க வைக்க நான் செய்த யுக்திகளை எனக்காக புதுப்பித்துத் தருக!
Comentarios