top of page

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி

அப்பா மகன் கதை. படித்ததில் பிடித்தது


ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து, நல்ல ஒரு வேலையில் சேர்ந்தான்.


அவன் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தை வாங்கி வந்து தாயிடம் கொடுத்தான். அதற்கு அவனுடைய தாய், "இத்தனை நாளும் உன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி, எல்லாச் செலவையும் செய்த உன் தந்தையிடம் போய் சம்பளத்தைக் கொடு" என்றாள்.


அதற்கு அவனோ " முடியாது " என்று மறுத்து விட்டான். தாயானவள் மீண்டும் அவனிடம் பணத்தை தந்தையிடம் கொடு என்று சொல்லியும் அவன் கேட்காததால், அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அடி விட்டாள். "பணத்தை அப்பாவிடம் போய்க்கொடு, என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்" என்றாள் தாய்.


அதற்கு அவன்,"அம்மா! ஒவ்வொரு முறையும் தந்தையிடம் நான் பணம் வாங்கும்போதும் அவருடைய கை மேலே இருக்கும், என்னுடைய கை கீழே இருக்கும். ஆனால் இப்போது நான் அவரிடம் சம்பளப் பணத்தைக் கொடுக்கும் போது அவருடைய கை கீழேயும், என்னுடைய கை மேலேயும் அல்லவா இருக்கும். அதனால்தான் இப்படி நடந்து கொண்டேன்" என்றான்.


இதை உள்ளறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அவனது தந்தை ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார்.


மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்து கொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.


Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page