top of page

பணத்தின் தேவை

மரணித்த பின்னரும் பணத்தின் தேவை

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்.

முகத்தில் ஏனோ ஒரு கவலை. ”டிக்கெட்” என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. “யோவ் எங்கயா போகணும்”னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, “காலங்காத்தால வந்துட்டானுங்க” என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர்.

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார் தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு. தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும் தெரிந்து கொள்ளலாம் என்று மனது விரும்பியது அவர்களை பின்தொடர்ந்தேன் தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் மயானம். சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர். அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி, கதறி அழுதார். எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட திருவிழா போல் கொண்டாடும் இந்தக் காலத்தில். இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து பஸ்ஸில் வரும் அளவுக்கு வறுமை, அவரிடம் இதற்கும் பணம் இல்லை என்று. உயிருக்குயிரான தன் மகனை தோளில் சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது.


உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்.


இறைவன் வறுமை மற்றும் இது போன்ற துயரங்களில் இருந்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்பானாக.....

Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page