top of page

தந்தைகள் காத்திருக்கிறோம்

Updated: 13 hours ago

ree

பிரசவ அறை

வாசலில்

"பெண் குழந்தை"

என்றதும்

அதுவரை

என் கண்ணில் இருந்த

ஈரம் ஏனோ

மெதுவாய் இதயத்தில்

இறங்கியது...


அவள்

கொலுசொலியிலும்

புன்னகையிலும்

வரும் இசை போல

இதுவரை எந்த

இசையமைப்பாளரும்

இசை அமைத்ததில்லை...


வீட்டில்

அதுவரை இருந்த

என் அதிகாரம்

குறைந்து போனது

அவள் பேச

ஆரம்பித்த பிறகு...


"அப்பாவுக்கு முத்தம்"

என நான் கெஞ்சும்

தோரணையில்

கேட்டால்

ஒரு முத்தம் கொடுத்துவிட்டு

ஏதோ எனக்கு

சொத்தெழுதி வைத்த

புன்னகை வீசி செல்வாள்...


என்னுடன் தினமும்

விளையாடிய

என் ரோஜாப்பூ,

பூப்பெய்த நாளில்

கதவோரம் நின்று

என்னை பார்த்த

பார்வையில் இருக்கிறதடா

உலகின் அத்தனை

பிரிவினைவாதமும்...


அவள்

பாதுகாப்பாய் வீடு

திரும்பும் வரை

உயிரற்ற உடலாய்

காத்திருந்த நொடிகளில்,

செத்து பிழைக்கும்

நான் தினம் தினம்

அவளை பிரசவித்தேன்...


இரு முறை தாய் வாசம்

தெரியவேண்டுமெனில்,

பெண் பிள்ளை

பெற்றெடுங்கள்...


மகள்களின்

நேசிப்பெனும் சிறையில்

விடுதலை இல்லை

ஆயுள் தண்டனை மட்டுமே...


மகளில்லாத

தந்தையர்களே,

சகோதரியில்லாத

ஆண் மகனே,

எங்கேனும் தனியாய்

பெண்ணைக் கண்டால்

சுதந்திரமாய் செல்ல விடுங்கள்..

தந்தைகள் காத்திருக்கிறோம்

அவள் வருகைக்காக..!!

Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page