top of page

பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு!


ree

அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்.

அப்போது அவருக்கு வயது 11.

அப்துல் கலாமை அடித்தவர் அவரது அப்பாதான் !

எதற்காக ?

அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் :

“எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ; ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார்.

ஊரிலுள்ள ஒருவர், ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார். நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால் வந்த அந்த மனிதரிடம் நான், “அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள். அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார்.

வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான். அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார்.

பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார்.

அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி, பதவியில் இருப்பவர்கள், பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது . அது பாவம். பதவியில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பரிசு தருவது, வேறு எதையோ எதிர்பார்த்துத்தான் என்று எடுத்துச் சொன்னார்.”

கள்ளமில்லா மகனின் மனதில் பதியும்படி கலாமின் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள், அந்தச் சின்ன வயதில் சிறுவன் கலாமின் உள்ளத்தில் சிற்றுளியால் செதுக்கிய கல்வெட்டாக பதிந்து விட்டது.

சிறுவன் பெரியவன் ஆனான். இந்திய நாட்டின் ஜனாதிபதியும் ஆனார்.

பதவிக் காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும்போது , பலரது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அப்துல் கலாமின் காதுகளில் வந்து விழுந்தாலும் சிறு வயதில் கலாமின் அப்பா சொன்ன சில வார்த்தைகள் மட்டுமே அந்த வேளையில் அவர் காதுகளில் தாரக மந்திரமாக தனித்து ஒலித்திருக்கும் .

அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை ?

“இறைவன் ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கின்றார் என்றால் அவருக்கான அனைத்தையும் ஆண்டவன் கொடுத்து விடுகிறார் என்று அர்த்தம் ; அதையும் விட மேலாக மனிதன் வேறு ஏதாவது எடுத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயம்.”

ஆம் ! அப்பா சொன்னது அப்துல் கலாமின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலிக்க, தான் வரும்போது கொண்டு வந்த இரண்டே இரண்டு சூட்கேஸ்களுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டு புறப்பட்டு விட்டார் கலாம். பதவியில் இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அத்தனையையும் அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார்.

“ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.”


Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page