top of page

அன்பை வெளிப்படுத்துவது எப்படி?



”அமெரிக்க பணக்காரர் ஒருவர் தன் தாயின் பிறந்த நாளன்று பரிசு வாங்க காரில் புறப்பட்டார்.

நகரின் பெரிய பூக்கடைக்கு சென்று ”பூங்கொத்து என்ன விலை” எனக் கேட்டார். ”250 டாலர்” என்ற உடன் ”இதை விட நல்லது இருக்கிறதா?” என்றதும் வேறொன்றை எடுத்து, ”இந்தப்பூ ஆர்கிட் வகையைச் சேர்ந்தது. ஒரு வாரத்திற்கு வாடாமல் இருக்கும். விலை 500 டாலர்” என்றார் கடைக்காரர்.

”நல்லது. இதையே பேக் பண்ணுங்க! உங்களிடம் ‘கூரியர் சர்வீஸ்’ உண்டா?” எனக் கேட்டார். ”இருக்கு சார். அதற்கு 100 டாலர் கட்டணம்” ”வேண்டாம். பூங்கொத்து இன்னிக்கே போயாகணும். என் தாயின் பிறந்தநாள். கூரியர் சர்வீசுல தாமதம் ஆயிட்டா போச்சு! எனக்காக ஒன்னு செய்யுங்களேன். இப்பவே ஒரு காரும், டிரைவரும் ஏற்பாடு செய்யுங்க. உடனடியாக பூங்கொத்தை இந்த விலாசத்தில கொடுத்திடுங்க” என்றார்.

”ஏற்பாடு செய்றோம். அதுக்கு 300 டாலர் கொடுங்க”. ”நோ ப்ராப்ளம்” என்று சொல்லி பணம், முகவரியை கொடுத்து விட்டு கிளம்பினார் பணக்காரர்.

பரபரப்பான வேலைக்கு இடையிலும் தாயை மறக்காமல் பூங்கொத்து அனுப்புகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் காரில் ஏறப் போனார். ஐந்து வயது சிறுமி ஒருத்தி அழுதபடி வந்தாள். ”குழந்தை ஏன் அழறே?” எனக் கேட்டார். ”அங்கிள். எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா”. ”தரேன். எதுக்கு நீ அழறே?” ”இன்னிக்கு என் அம்மாவின் பிறந்த நாள். அவங்களுக்கு பிடித்த ரோஜாப்பூ வாங்கித் தரணும். அதுக்கு என்னிடம் பணம் இல்லை. நீங்க கொடுத்தால் ரோஜா வாங்கி கொடுப்பேன். அம்மா எனக்காக வெயிட்டிங். ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரலாமா”. ”ஒரு டாலர் என்ன! 10 டாலர் தரேன் எடுத்துக்கோ!” ”வேண்டாம் அங்கிள். ஒரு டாலர் போதும்” என்று வாங்கி கொண்டு சிட்டாக பறந்தாள் சிறுமி.

சாக்லேட் வாங்க தான் இப்படி கேட்கிறாளோ? என நினைத்தார் பணக்காரர். மெதுவாக காரில் பின்தொடரும்படி டிரைவரிடம் தெரிவித்தார். தெருவோர பூக்கடை ஒன்றில் ரோஜாப்பூ வாங்கினாள். சந்தோஷத்துடன் பூவை கையில் ஏந்தியபடி ஓடினாள். காரும் மெதுவாக தொடர்ந்தது. கடைசியில் ஒரு கல்லறையின் அருகில் போனாள். ரோஜா பூவை வைத்து, ”அம்மா. ஹாப்பி பர்த்டே! உனக்கு பிடித்த ரோஜா வாங்கி வந்திருக்கேன்” என கல்லறையில் முத்தமிட்டாள்.

அதைப் பார்த்த பணக்காரருக்கு கண்ணீர் அரும்பியது. அப்போது டிரைவர், ”சார் உங்களுக்கு மீட்டிங் போக நேரமாச்சே!” என அவசரப்படுத்தினார். காரில் புறப்பட்ட பணக்காரர் பூக்கடையில் தான் வாங்கி வைத்த பூங்கொத்தை பெற்றுக் கொண்டு தாயைக் காண கிளம்பினார்.

வீட்டின் முன் கார் நிற்பதைக் கண்ட பணக்காரரின் தாய் கண்களைச் சுருக்கியபடி பார்த்தார். அம்மா என அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தவர், ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா” என காலில் விழுந்தார்.

”உனக்கு இருக்கும் பல வேலையில என்னைப் பார்க்க ஏம்பா வந்தே” என்றார் தாய். ”அன்பை வெளிப்படுத்துவது எப்படி என்பதை சிறுமி ஒருத்தி மூலம் கற்றுக் கொண்டேன். உயிரோடு இல்லாத தாயிடம் அவள் காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்தேன். உங்களிடம் வாழ்த்து பெறுவதை விட பாக்கியம் எனக்கு வேறில்லை” என்றார் பணக்காரர். மகனை அணைத்து முத்தமிட்டாள் தாய்.

பெற்றோரிடம் அன்பு காட்ட மறக்காதீர்கள்.

Comments


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page